அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் ஆதிபராசக்தியின் அற்புத அவதாரங்களில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ரூபிணிகளாக, காட்சி தரும் திருத்தலங்கள்தான். மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில்..
பாண்டிய மன்னனின் உத்தரவுப்படி இச்சா சக்தியாகிய திருவுடை அம்மனை வடிவமைக்க தேர்ந்த கல் ஒன்றைச் சிற்பி, மலை உச்சியில் இருந்து எடுத்துக் கீழே கொண்டு வரும்பொழுது. பிடி நழுவி உருண்டு அந்த கல், மூன்று பாகங்கள் ஆனது. மனம் பதறிய சிற்பி தன் கைகளைத் துண்டித்துக் கொள்ளப் போனபொழுது, பராசக்தி தரிசனம் கொடுத்தருளினாள். “இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என மூவராக உருக் கொள்ளவே மூன்று பகுதிகளாக ஆனேன். மூவரின் உருவங்களையும் வடித்து, மூன்று கோயில்களிலும், நிறுவி விடுவாயாக’ என உத்தரவிட்டு மறைந்தாள். அப்படி காட்சி தந்த தினம் பௌர்ணமி ஆகும்.
சென்னையைச் சுற்றிலும் “ஃ’ வடிவத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில்களை இணைக்க அரசர் காலத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. இன்றைக்கும் மேலூரில் இந்தச் சுரங்கப் பாதையைக் காணலாம்.
திருவுடை அம்மன் (மேலூர்): ஸ்ரீ திருமணங்கீஸ்வரருக்கு உடனுறை தேவியாக மேலூரில் காட்சி தரும் திருவுடையம்மன் முப்பெரும் தேவியரில் மூத்தவராக மகாசக்தியாக விளங்குகிறார்.
தலவரலாறு: ஒரு காலகட்டத்தில் அடர்ந்த காடுகளுக்கும், முட்புதருக்கும் நடுவில், புற்று வடிவத்தில், சர்ப்பம் சூழ, சிவலிங்கம் சுயம்பு உருவாய் இருந்ததை, அந்த ஊர்ப் பெரியவர்கள் கண்டுபிடித்தனர். ஒரு பசு தினமும், இந்தப் புற்றின் மேல் பால் பொழிவதையும், நாகம் குடித்துச் செல்வதையும் பார்த்து, அந்தச் சுயம்பு லிங்கத்துக்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வந்தார்கள்.
ஸ்ரீதிருமணங்கீஸ்வரர் சுயம்புலிங்க வடிவில் ஐம்பொன் கவசம் அணிந்து கண்கவர் தோற்றத்தில் காட்சி தருகிறார். ஈஸ்வர சன்னதிக்கு எதிர் வட திசையில் தெற்கு நோக்கி ஸ்ரீதிருவுடையம்மன் அழகே உருவாக அமைதியாகக் காட்சி அளிக்கிறார். இந்தப் பகுதியில் எங்கு நோக்கினாலும், வேம்பும், பாம்பும் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
ஆடிப்பூரத்தன்று நடக்கும் 108 பால் குடங்கள் அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சி. பங்குனி உத்திரம் திருக்கல்யாணம், சிவராத்திரி - நவராத்திரி சிறப்பு பூஜைகள், கார்த்திகை சொக்கப்பனை ஏற்றுதல் என எந்நாளும் வைபவம்தான். இந்த அம்மனுக்கு மஞ்சள் - குங்குமக் காப்பு, மலர் ஆடை அலங்காரம் செய்து வேண்டிக் கொண்டால் மங்களக் காரியங்கள் கைகூடுமாம்!
ஸ்ரீவடிவுடை அம்மன் (திருவொற்றியூர்): ஞானசக்தியாக, வடிவுடை நாயகியைத் தொழுவோருக்கு அற்புதமான மணவாழ்க்கை அமையும். பௌர்ணமிகளில், அதுவும் வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுவதால் நாள் முழுதும் நடை திறந்திருக்கிறது.
அகத்தியருக்குக் கல்யாண சுந்தரராய் ஸ்ரீ ஆதிபுரீஸ்வரரும் வடிவுடையம்மனும் திருமணக் கோலத்தில் காட்சி தருவது பரவசமான நிகழ்வு.
இங்கு வடிவுடை அம்மனுக்கு தங்கரத பவனி நடைபெறுவது அற்புதமான கொடுப்பினை. தினமும் திருவிழா போல் அம்மனுக்குப் புஷ்பாஞ்சலியும், மஞ்சள் - குங்குமக் காப்பும் நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஸ்ரீ கொடியிடை அம்மன் ஸ்ரீ மாசிலாமணீயீஸ்வரர் (திருமுல்லைவாயல்): அம்பத்தூர் - ஆவடி இடையே வடதிரு முல்லைவாயல் என்னும் திருத்தலத்தில் இறைவன் மாசிலாமணீயீஸ்வரர் - இறைவி கொடியிடை நாயகி அருள்பாலிக்கின்றனர்.
தொண்டைமாமன்னன் பைரவர் துணையுடன், தன்னை எதிர்த்துப் போர் புரிந்த குறும்பர்களை ஒடுக்க திருமுல்லைவாயல் வந்தான். அவர்களை எதிர்க்க இயலாமல் திரும்பும்பொழுது, தான் வந்த யானையின் கால்கள் முல்லைக் கொடிகளால் சுற்றிக் கொள்ள, வாளால் கொடிகளை வெட்டும்பொழுது உள்ளே இருந்த சிவலிங்கத்தை சேர்த்து வெட்டிவிட, தன்னை மாய்த்துக் கொள்ளப் போன மன்னனைத் தடுத்தாட்கொண்டார் இறைவன்.
நந்தி தேவரை அரசனுக்குத் துணையாக அனுப்பி, குறும்பர்களை அழிக்க வைத்தான். அதற்கு வெற்றிக் காணிக்கையாகத் தெண்டைமான் கொண்டு வந்து வைத்த இரண்டு வெள்ளெருக்குத் தூண்களை இன்றும் கருவறையின் முன் காணலாம்.
பகைவர்களை விரட்டத் திரும்பிய நந்தி பகவான் இன்றும் திரும்பிய கோலத்தில்தான் இருக்கிறார். வெட்டுப் பட்ட காரணத்தால் சிரசில் அபிஷேகம் கிடையாது. இறைவன் திருமேனி சந்தனக் காப்பு இடப்பட்டு இருக்கும்.
அசுவினி முதலான் 27 நட்சத்திரங்களும் செய்த பாவம் நீங்க கொடியிடை நாயகியை வணங்கி சாபம் நீங்கிய இடம். இந்திராணி இத்தலத்து அம்மனை வழிபட்டு இந்திரனை மீளப்பெற்ற தலம்.
கேட்டாலே முக்தி தரும் இத்தலத்தில் சூரியன் முதலிய ஒன்பது கோள்களும் மக்களுக்கு இசைவாக வேண்டியதை அளிப்பதால், நவக்கிரகங்களுக்குத் தனி சன்னிதி கிடையாது. இறைவனும், இறைவியும் லிங்கத்தில் மறைந்து அருளிய நாள் வைகாசி மாதம், பௌர்ணமி, கடக ராசி, விசாக நன்னாள் ஆகும். ஆண்டுதோறும் இன்னாட்களில் பிரம்மோத்சவம் நடைபெறுகிறது.
சிறப்பு: வெள்ளிக்கிழமை பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வரும் நாளில் மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும், வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால், காசி - இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.
- ஆர். பாலா
Source Dinamalar
வெள்ளி பௌர்ணமி சிறப்பு (03 .11 .2017) முப்பெரும் தேவியர்! தர்சனம்
Reviewed by Admin
on
October 31, 2017
Rating:
No comments: