ஒவ்வொரு மார்கழி பௌர்ணமி அன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும் .இந்த வருடம் ஆங்கில புத்தாண்டு 01 -01 -2018 அன்று ஆருத்ரா வருகின்றது . பொதுவாக நாராஜர் என்றால் நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சிவனின் நடன திருக்கோலம். நடன திருக்கோலத்தைக் கொண்டு ஐந்து சபைகளாக பிரிக்கப்படுகிறது .
ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன.ஐம்பெரும் அம்பலங்கள் பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் ஆகும். இவை சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து ஊர்களிலுள்ள சிவன் கோவில்களில் அமைந்துள்ள நடராசர் சன்னிதிகளைக் குறிக்கின்றன.
1.சிதம்பரம் நடராசர் கோயில்-பொன்னம்பலம்
2.மதுரை மீனாட்சியம்மன் கோவில்-வெள்ளியம்பலம்
3.திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் -இரத்தினம்பலம்
4.திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்-தாமிர அம்பலம்
5.குற்றாலநாதர் கோயில்- சித்திர அம்பலம் (சித்திர சபை).
இவை கனகசபை, இரத்தினசபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை என்றும் அழைக்கப்படுகின்றன.
1.பொன்னம்பலம்
பொன்னம்பலம் அல்லது கனக சபை எனப் பெயர் கொண்டது, சிதம்பரத்திலுள்ள நடராசர் கோவில் ஆகும். இக்கோவில் பஞ்சபூதத் தலங்களில் ஆகாய தலமாகும். பெரும்பாலான சிவத்தலங்களில் சிவன் லிங்க வடிவில் அமைந்திருக்க, இக்கோவிலில் நடனத்தின் தலைவனாக நடராசர் வடிவில் உள்ளார். இங்குள்ள நடராசரின் நடனக்கோலம் ஆனந்த தாண்டவமாகும். இங்கு நடராசர் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்கிரபாதர் முனிவருக்கும் தனது பிரபஞ்ச நடனத்தை தைப்பூசத் திருநாளில் ஆடிக்காட்டியதாக தொன்நம்பிக்கை உள்ளது.
இச்சபையில் ஆடியமையால் சிவபெருமானுக்கு பொன்னம்பலத்தான், பொன்னம்பலநாதன் என்ற பெயர்கள் உருவாயின.
2.வெள்ளியம்பலம்
வெள்ளியம்பலம் அல்லது இரஜத சபை எனப் பெயர் கொண்டது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள நடராசர் சன்னிதியாகும். பிற தலங்களில் எல்லாம் இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசர் வெள்ளியம்பலத்தில் மட்டும் வலக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் காட்சி தருகிறார்[8]. வெள்ளியால்ஆன அம்பலம் (அரங்கம்) என்பதால் இவ்விடம் வெள்ளியம்பலம் எனப் பெயர் பெற்றது.
மரபு வழிக் கூற்றுகள்
மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்தைக் காணவந்த பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதர் முனிவரும் சிதம்பரம் நடராசனின் ஆனந்த தாண்டவத்தைக் காணாமல் உணவு உண்ண மறுக்க, சிவன் அவர்களுக்காகத் தனது ஆடிய கோலத்தை மதுரையில் காட்டியருளிய இடம் வெள்ளியம்பலம் எனக் கூறப்படுகிறது.
பிற தலங்களில் எல்லாம் இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசர் வெள்ளியம்பலத்தில் வலக்காலைத் தூக்கி ஆடுகிறார். நடனக் கலையைக் கற்ற பாண்டிய மன்னன் இராஜசேகர பாண்டியன், நடனமாடுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்தான். வெள்ளியம்பலத்தில் உள்ள நடராசர் ஒரு காலில் எப்பொழுதும் நின்றபடி ஆடுவதால் அவருக்குக் கால் வலிக்குமே என்று கருதி அவரிடம் காலை மாற்றி ஆடும்படி வேண்டிக் கொள்ள நடராசரும் அவனுக்காக இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.[8]
மீனாட்சியை மணந்து மதுரைக்கு அரசனானதால் வெள்ளியம்பலத்தில் நடராசர் பத்துக் கரங்களிலும் ஆயுதங்களுடன் காணப்படுகிறார் என்ற கூற்றும் உள்ளது.
3.இரத்தின அம்பலம்
இரத்தின அம்பலம் அல்லது இரத்தின சபை என்ற பெயர் கொண்டது திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேசுவரர் கோவில் ஆகும். இங்கு நடராசர் தனது இடதுகாலை உயரத் தூக்கிய நடனக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள நடனக் கோலம் ஊர்த்தவ தாண்டவமாகும்.
காளி தேவிக்கும் நடராசருக்கும் நடந்த நடனப் போட்டியில், இருவரில் யார் சிறந்தவர் என்று காணமுடியாதவாறு இருவரும் சமமாக ஆடினர். இறுதியில் நடராசர், கீழே விழுந்த தனது காதணியை நடனம் இடையூறைடையா வண்ணம் இடது காலால் எடுத்து அக்காலை உயரத்தூக்கி எடுத்த காதணியைக் காலாலேயே அணிய முற்பட, காளியால் அக்கோலத்தில் ஆடமுடியாமல் தன் தோல்வியை ஒப்புக் கொண்டதாகச் சொல்கிறது மரபுவழி வரலாறு. இங்கு ஆருத்தரா தரிசன வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.
இரத்தின அம்பலத்திலுள்ள நடராசர் அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான். இவர் இரத்தின சபாபதி என்று அழைக்கப்படுகிறார். இந்த அரங்கத்தில் ஸ்படிக லிங்கமும் திருமுறைப்பேழையும் உள்ளன. அம்பலத்தைச் சுற்றி வரும்போது சுந்தரர் பதிகம் பதிக்கப்பட்டுள்ளதைக் காணமுடியும். இவ்வம்பலத்தின் விமானம் செப்புத்தகடு வேயப்பட்டு 5 கலசங்களுடன் அமைந்துள்ளது.
4.தாமிர அம்பலம்
தாமிர அம்பலம் அல்லது தாமிர சபை எனப் பெயர் கொண்டது, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில்அமைந்துள்ள நடராசர் சன்னிதியாகும்.
நெல்லையப்பர் கோவிலின் உட்புறம் அமைந்துள்ள இந்த அம்பலம் சிறந்ததொரு கலைப்படைப்பாகும். ஆருத்திரா தரிசன விழாவின் போது இங்கு நடராசர் மற்றும் சிவகாமியின் உருவச் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சந்தன சபாபதி என அழைக்கப்படும் நடராசர் தாமிர அம்பலத்துக்குப் பின்னால் உள்ளார். சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட இவரைத் தாமிர அம்பலத்தின் வழியாகப் பார்க்கும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும். பெரிய சபாபதி என்ற மற்றொரு சன்னிதியும் இக்கோவிலில் நடராசருக்கு உள்ளது. சிறப்பு விசேட நாட்களில் இவருக்கு பூசைகள் நடைபெறுகின்றன. இந்த உற்சவ மூர்த்தி கோவிலுக்கு வெளியே எடுத்துச் செல்லப்படுவதில்லை.
5.சித்திர அம்பலம்
சித்திர அம்பலம் அல்லது சித்திர சபை எனப் பெயர் கொண்டது, குற்றாலநாதர் கோவில் ஆகும். இக்கோவிலின் தல விருட்சம் குறும்பலா என்பதால் குறும்பலாவீஸ்வரர் கோவில் எனவும், கோவில் சங்குவடிவ அமைப்பு கொண்டுள்ளதால் சங்குக் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.[13][14] இங்கு சித்திர அம்பலம் முதன்மைக் கோவிலைவிட்டுச் சற்றுத் தள்ளி ஒரு கண்கவர் சித்திரக் கூடமாக அமைந்துள்ளது. இதன் உட்புறத்தில் நூற்றுக்கணக்கான அழகிய சுவற்றோவியங்கள், இந்து சமயப் புராணக் கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் சித்தரிக்கின்றன. முக்கிய திருவிழாக்களின் போது குறும்பலாவீஸ்வரர் கோவிலில் இருந்து நடராசர் உருவச்சிலை இங்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆருத்தரா தரிசனத்தின் போது தாண்டவ தீப ஆராதனை நடைபெறும்.
Keyword
Sri aaruthra darisanam
Girivalam January 2018
Thiruvannamalai girivalam 2018
Keyword
Sri aaruthra darisanam
Girivalam January 2018
Thiruvannamalai girivalam 2018
Sri Aaruthra darisanam 01-01-2018
Reviewed by Admin
on
December 21, 2017
Rating:
No comments: